பறந்து போ திரைப்பட விமர்சனம் !!

8

இயக்குநர் ராமின் இயக்கத்தில் தமிழ்ப்படம் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் வெளிவந்திருக்கும் படம்.

எளிமையான ஒரு குடும்பத்தின் பின்னணியில் குழந்தைகளுக்கு இந்த நகரம் எத்தனை சிறையாக இருக்கிறது என சொல்லியுள்ள படம் தான் பறந்து போ

சொந்தமாக மளிகை கடை வைக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறார் கோகுல்(சிவா). அவரின் மனைவி குளோரி(கிரேஸ் ஆண்டனி) சேலை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்த உதவி செய்கிறார். அவர்களின் ஒரே மகன் அன்பு(மிதுல் ரயன்). படு சுட்டிப் பையன் அவன். இந்நிலையில் கோவையில் நடக்கும் கண்காட்சியில் வேலை செய்ய கிளம்புகிறார் குளோரி.

ஒத்த ஆளாக மகனை பார்த்துக் கொள்கிறார் கோகுல். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் அன்பு ஒரு நாள் தன்னை பைக்கில் வெளியே அழைத்துச் செல்லுமாறு அடம்பிடிக்கிறான். வேறு வழியில்லாமல் மகனை தன் பைக்கில் அமர வைத்து ரைடு செல்கிறார் கோகுல். அப்பொழுது அங்கு போகலாம் அப்பா, இங்கு போகலாம் அப்பா என அடுத்தடுத்து கோரிக்கை விடுக்கிறான் அன்பு. கோகுலும் சரிடா மகனே என அவன் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்கிறார்.

அந்த பயணத்தின்போது அப்பா, மகன் இடையேயான பாசம், புரிதல் மேலும் அதிகரிக்கிறது. நாமும் இப்படியொரு பைக் ரைடு செல்ல வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்துகிறது. மகன் கேட்பதை எல்லாம் அப்பா கோகுல் பொறுமையாக செய்வதை பார்க்கவே நன்றாக இருக்கிறது. படத்தில் பாடல்கள் இருக்க வேண்டுமே என வைக்கவில்லை.மாறாக படத்தின் கதையோடு அந்த பாடல்கள் ஒன்றிணைந்துவிடுகிறது.

ராம் படம் என்றால் அது சீரியஸாக இருக்கும் என நினைத்தால் அதற்கு நேர் எதிராக இருக்கிறது பறந்து போ. காமெடியில் அசத்தியிருக்கிறார் ராம். காமெடிக்கு பெயர் போன சிவாவை நம்மை சிரிக்க வைத்திருப்பதுடன் அய்யோடா என க்யூட்டாக ஃபீல் பண்ணவும் வைத்திருக்கிறார்கள்.

அன்பான அப்பாவாக கவர்கிறார் சிவா. மேலும் தனக்கே உரிய காமெடியிலும் கலக்கி கைதட்டல்களை பெறுகிறார். நம்ம அகில உலக சூப்பர் ஸ்டாரா என வியக்க வைக்கிறார்.

அன்புவாக நடித்திருக்கும் மிதுல் ரயனை பாராட்டியே ஆக வேண்டும். யாருடா இவன் எப்ப பார்த்தாலும் நை நைனு என சொல்ல வைக்காமல் அழகாக நடித்திருக்கிறார். தனக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அப்பாவிடம் கேட்கும் மகனாக நடித்திருக்கிறார் மிதுல் ரயன்

குளோரியாக வாழ்ந்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. செல்போன் மூலம் கணவருடன் பேசினாலும் அது ரொம்ப ரியலாகவும், டச்சிங்காகவும் உள்ளது.

வீட்டில் அடைந்து கிடந்த அன்பு மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வர மறுக்கும்போது நான்கு சுவருக்குள் இல்லாமல் பொதுவெளியில் இயற்கையை ரசிக்கும் குழந்தை தான் கண்ணுக்கு தெரிகிறது.

எல்லோரும் சிரித்து ரசிக்க ஓரு அழகான படம்