கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ !!

2

இந்திய திரையுலகின் இரண்டு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக தயாரிப்பாளர் – கதாநாயகன் கூட்டணியில் இணையும் திரைப்படம் ‘தர்மன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியதுடன், படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் நட்பு ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்பட்ட ஒன்று. அந்த நட்பின் அடுத்த அத்தியாயமாக உருவாகும் ‘தர்மன்’, இந்திய திரையுலகே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

46 ஆண்டுகளாக தரமான படைப்புகளை வழங்கி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடிப்பதும் இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். அவருடன், இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடி காட்சிகளுக்கு தேசிய விருது பெற்ற அன்பரிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.

படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பை கார்த்திக் ராஜ்குமார், படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ், கலை இயக்கத்தை அண்ணாதுரை கவனிக்கின்றனர். மேலும் டிஸ்னி இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்புக் குழுவினர், படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதில் கலைப்புலி எஸ். தாணு, அன்புச்செழியன், ஆர்.கே. செல்வமணி, லிங்குசாமி, சன் நெட்வொர்க் CTO கண்ணன், செண்பகமூர்த்தி, தமிழ் குமரன், JIO Star நிறுவனத்தின் கிருஷ்ணன் குட்டி, பாலசந்திரன், பிரதீப் மில்ராய் பீட்டர், சரேகமாவின் ஆனந்த், சரவணன் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் ‘தர்மன்’, கமல்ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியின் வரலாற்று தருணமாக மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகவும் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.