யோகி பாபு – ரெடின் கிங்ஸ்லி இணையும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ !

2

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படத்தின் பூஜை விழா ஜூன் 26 அன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்க, அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

பூஜை விழாவில் பேசிய இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன், “இன்று பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் மெல்வின், “விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தக் கதையை கேட்டவுடன் உற்சாகமாக தயாரானோம். அனைவருக்கும் பிடிக்கும் படம் இது” என்று தெரிவித்தார். நடிகர் அமித் பார்கவ், “இயக்குநரின் பார்வையும் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும். அனைவரும் திரையரங்குகளில் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி, “இது இயக்குநர் செந்தில்நாதனின் கனவுப் படம். அந்தக் கனவு நிறைவேற முழு படக்குழுவும் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது” என்றார். யாஷிகா ஆனந்த், “நல்ல கதைக்காக காத்திருந்தபோது இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், “விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் இன்றைய தமிழ் சினிமாவுக்கு தேவையான முயற்சி. நல்ல உள்ளடக்கமும் சரியான நேரமும் இருந்தால் இந்தப் படம் வெற்றி பெறும்” என வாழ்த்தினார்.

விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.