போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

202

கோவை, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரி பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழுக்காக உயிர் கொடுத்த பீளமேடு தண்டாயுதபாணி, தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலக புகழ்பெற்ற தொழில் அதிபராக உயர்ந்துள்ள ஹெச்.சி.எல். நிறுவன தலைவர் சிவ்நாடார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் இந்த கல்லூரியில் படித்துள்ளனர்.

இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்த விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழகத்தில் உள்ளன. 100 மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் 8 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 கலை கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

அனைவருக்கும் ஆரோக்கியமான கல்வியை தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது. அனைவருக்கும், உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை தமிழக உயர்கல்வித்துறை வழங்கி வருகிறது. தமிழக இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். எனினும் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ள இளைஞர்களை மீட்க வேண்டும். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளது கவலை அளிக்கிறது. நல்ல கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.